தொடரை வெல்லுமா இந்தியா?
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி 'டி-20' போட்டி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ‘டி-20’ போட்டியிலும் வென்று, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் 4 போட்டிகள் கொண்ட ‘டி-20′ தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது மற்றும் கடைசிப் போட்டி ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
முதல் டி-20 போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடி சதம் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் எழுச்சி காண்பது அவசியம். கடந்த போட்டியில் அரைசதம் எட்டிய அபிஷேக் சர்மாவும், அசத்தல் சதம் விளாசிய திலக் வர்மாவும் அதிரடியைத் தொடர வேண்டும்.
பின்னர் வரும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப் சிங் உள்ளிட்டோரும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். வேகத்தில்’ அர்ஷ்தீப் சிங், ‘சுழலில்’வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய் உள்ளிட்டோரும் மிரட்டுவது தொடர வேண்டும்.
தென் ஆப்ரிக்க அணியில் ரிக்கெல்டன், ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசென், மில்லர் என பேட்டிங் வரிசை நீள்கிறது. பந்துவீச்சாளர்கள் யான்சென், கோட்ஜீயும் அதிரடியாக ஆடுகின்றனர். இருப்பினும் அணியின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு போதவில்லை. இதேநிலை தொடர்ந்தால் இந்திய அணி எளிதாக தொடரை 3-1 எனக் கைப்பற்றலாம்.
ஜோகனஸ்பெர்க் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியானது. இங்குதான் 2007ல் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று இந்தியா சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இங்கு இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணி, அதில் 4 வெற்றி, 2 தோல்வியும் கண்டுள்ளது. இன்றைய போட்டிதான் நடப்பாண்டில் இந்தியா ஆடும் கடைசி டி-20 ஆட்டமாகும். எனவே இதனை வெற்றியோடு முடித்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.







