ODI-ல் இந்திய மகளிர் ஹாட்ரிக் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் ஒயிட்வாஷ் தோல்வி

வதோதரா 3-வது ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் தோல்வி அடைய செய்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணத்தில் 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி பங்கேற்றது. ஏற்கனவே டி-20 தொடரை 2-1 என இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றினர். அடுத்த நடந்த 2 ஒருநாள் போட்டியிலும் ஜெயித்து தொடரையும் வென்றது இந்தியா. இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் “பேட்டிங்” தேர்வு செய்தது.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அவ்வணியின் தொடக்க வீரர்கள் ஜோசப், கேப்டன் ஹேலே மேத்யூஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் டீன்ரா டோட்டியும் 3 ரன்களில் அவுட்டாக 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது மேற்கிந்திய தீவுகள். பின்னர் ஜோடி சேர்ந்த ஷெமைன் காம்பெல்லே – சினெல்லே ஹென்றி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரைசதம் விளாசி 61 ரன்களில் வெளியேறினார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக மேற்கிந்திய தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 6, ரேணுகா தாகூர் 4 விக்கெட்டுகளை அள்ளினர்.

பின்னர் எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கும் மந்தனா (4), ஹர்லீன் தியோல் (1) ஏமாற்றினர். பிரதிகா ராவல் (18), கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் (32), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (29) ஆட்டமிழந்தனர். இறுதியில் தீப்தி சர்மா (39), ரிச்சா கோஷ் (23) ரன்கள் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 28.2 ஓவரில் 167/5 எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகி விருதை ரேணுகா தாகூரும் தட்டிச் சென்றனர்.








