எதிரணியை அச்சுறுத்தும் எர்லிங் ஹாலண்ட்..!
மான்செஸ்டர் சிட்டியின் சவாலை சமாளிக்குமா ரியல் மேட்ரிட்?

மான் செஸ்டர், பிப்.10; சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணியின் அதிரடி வீரர் எர்லிங் ஹாலண்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ரியல் மேட்ரிட் அணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மான்செஸ்டர் நகரில் நாளை (பிப்.11) நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சாம்பியன்ஸ் லீக் தொடரில் 15 முறை பட்டம் வென்றிருக்கும் ரியல் மேட்ரிட் அணி, நாளைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்டை சமாளிக்க வியூகம் வகுத்து வருகிறது.
எதிரணியை மிரட்டும் மான்செஸ்டர் சிட்டியின் எர்லிங் ஹாலண்ட்

எர்லிங் ஹாலண்ட், தனது கடைசி எட்டு ஆட்டங்களில் ஏழு கோல்கள் அடித்து எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.
தடுப்பு ஆட்டக்காரர்களான அன்டோனியோ ருடிகர், டேவிட் அலபா மற்றும் லூகாஸ் வாஸ்குவேஸ் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், மேட்ரிட் அணியின் தடுப்பாட்டம் தள்ளாடுகிறது.
ரியல் மேட்ரிட் அணியின் தடுப்பாட்டம் தள்ளாடுகிறது

ரியல் மேட்ரிட் அணியின் தடுப்பாட்டம் எதிரணியினர் உடைத்து ஊடுருவும் வகையில் சற்று பலவீனமாக இருக்கிறது.
கிலியன் எம்பாப்பே, வினிசியஸ் ஜூனியர், ஜூட் பெல்லிங்காம் ரோட்ரிகோ கோயஸ் போன்ற முன்கள ஆட்டக்கார்களை பயன்படுத்தும்போது, தடுப்பு ஆட்டத்தையும் சமநிலையில் வைப்பது பயிற்சியாளருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.







