புதிய சாதனை படைத்த சாம்சன்

டி-20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதம்

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில், அடுத்தடுத்து 2 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.

சமீப காலம் வரை விக்கெட் கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சனின் பெயரைக் கேட்டாலேயே இந்திய ரசிகர்களுக்கு வேப்பங்காயாக கசந்தது. கடந்த 10 ஆண்டுகளில், டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு பெற்றும், அவர் குறைந்த ரன்களில் தொடர்ந்து அவுட்டானாதால், பிசிசிஐ தேர்வுக் குழுவை பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களால் வாட்டி வதைத்தனர். இத்தனைக்கும் சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங் பணிகள் சிறப்பாகவே இருந்தன. இருப்பினும் புதிய விக்கெட் கீப்பர்களின் வருகையால், அவரது இடம் இந்திய அணியில் ஊசலாட்டமாகவே இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில், 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன். இதில் 1 சதம், 3 அரை சதம் அடித்து, அவரது பேட்டிங் சராசரி 56.66 என சிறப்பாக இருந்தாலும், அவரைப் புறக்கணிப்பதை பிசிசிஐ வாடிக்கையாக வைத்து உள்ளது. இதேபோல் 25 டி-20 போட்டிகளில் ஆடியுள்ள சஞ்சு சாம்சனின் பேட்டிங் சராசரி 25-க்கும் கீழ் இருந்ததால், வீரர்கள் அட்டவணையில் சஞ்சு சாம்சனின் பெயரை அறிவித்தால், இந்திய ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தனர்.

இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் கேப்டனாக சாதித்த சஞ்சு சாம்சனை, தொடர்ந்து விடாமல் பிடித்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் மட்டுமே. தொடக்க வீரராக மட்டும் இல்லாமல், கேப்டனாகவும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது ஆர்.ஆர். அணி. இதன் உச்சமாக 2025-ம் ஆண்டின் ஐபிஎல் ரீடெய்னிலும், 18 கோடி ரூபாய் கொடுத்து, முதல் வீரராக தக்க வைத்தது சஞ்சு சாம்சனுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சஞ்சு சாம்சன் அபார சதம் அடித்து, தனது திறமையை நிரூபித்துள்ளார். அதிரடியாக ஆடிய அவர், 50 பந்தில், 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன், 107 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முன்னதாக கடந்த மாதம் நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், 47 பந்தில், 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். இதனால் இந்திய அணி 297 ரன்கள் குவித்து புதிய இமாலய சாதனைப் படைப்பதற்கும் அவர் காரணமாக அமைந்தார்.

தற்போது சஞ்சு சாம்சனின் சிக்சர் மழையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். அவரை எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் புகழ்மாலை சூட்டுகின்றனர். தொடர்ந்து 2 அதிரடி சதங்கள் அடித்ததன் மூலம், சர்வதேச டி-20 போட்டிகளில், அடுத்தடுத்து 2 சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்து, தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து சாதித்துள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x