புத்தாண்டு கொண்டாட்டத்தில் 14 பேரை கார் ஏற்றி கொன்றவர்

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஐ.எஸ்., ஆதரவாளர்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 14 பேரை கார் ஏற்றி கொன்றவர், அந்நாட்டு ராணுவ வீரராக பணியாற்றிய ஐ.எஸ்., ஆதரவாளர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் லுாசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்று கொண்டிருந்தன. இதில் நகரின் முக்கிய பொழுதுப்போக்கு தளமான போர்பன் தெருவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுக்கூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை 3.15 மணியளவில் வேகமாக பாய்ந்து வந்த சொகுசு வேன் ஒன்று, திடீரென பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சின்னாபின்னமாக்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் நாலாப்புறமும் அலறியடித்து சிதறி ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதலில் வாகன ஓட்டுனர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 போலீசார் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சூழலில் விபத்தை ஏற்படுத்தியவர் 42 வயதான ராணுவ வீரர் ஷம்சுத் டின் ஜாபர் என்பதும், அவர் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2007 முதல் 2020ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார் ஷம்சுத் டின் ஜாபர். இவர் ராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றியதற்காக பதக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும் ராணுவத்தில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகவும் பணியாற்றி உள்ளார் அவர். கடந்த 2009 முதல் 2010ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ஒரு வருடம் ஷம்சுத் டின் ஜாபர் பணியாற்றி உள்ளார்.

இதனிடையே சம்பவ இடத்தில் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனை ஆய்வுக்கு உட்படுத்தி எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஷம்சுத் டின் ஜாபருடன் வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் நியூ ஆர்லியன்ஸ் நகரின் போர்பன் தெரு தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தோர் எங்களின் இதயங்களில் வாழ்கின்றனர். இந்த அருவருக்கத்தக்க தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தானும், தேசமும் வருந்துவதாக கண்ணீர் மல்க கூறினார்.

தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு சம்மந்தப்பட்ட நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக எப்.பி.ஐ. தெரிவித்து இருப்பதாக ஜோ பைடன் கூறினார். பிறரை கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்துவதற்கு வாடகைக்கு வாகனம் எடுத்து, அதில் ஐஎஸ்ஐஎஸ் கொடியையும் பறக்கவிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கு முன்பு யாரும் தவறான முடிவுகளுக்கு வர வேண்டாம் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தினார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x