திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்தால்…
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்; அமைச்சர் சேகர்பாபு

சென்னை, பிப்.06; திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று, அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி படவேட்டம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை அமைச்சர் சேகப்பாபு நேற்று (பிப்.05) ஆய்வு செய்தார்.
“மார்ச் 3 படவேட்டம்மன் கோவில் குடமுழுக்குவிழா”

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு, ஓட்டேரி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 3ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
“வடமாநிலம் போல் பிரச்னை உருவாக்க முயற்சி”

அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலம் போல இங்கே பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள் என்று அமைச்சர் விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் எனக் குறிப்பிடப் போவதில்லை, பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
“திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல்”

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கிறார்கள் என்று பாஜகவினரை அமைச்சர் சாடினார்.
நேற்றைய (பிப்.04) போராட்டம் தேவையற்ற போராட்டம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களே இது தேவையற்ற ஒரு பிரச்னை என்று கூறுகிறார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“பாஜகவுக்கு பூஜ்ய வாக்குகள் கூட கிடைக்காது“

திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்னையை கையிலெடுத்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்ல என அவர் தெரிவித்தார்.
துறை அமைச்சர் என்ற முறையில் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.






