2025 ஐபிஎல் தொடர்: மார்ச் 14ல் தொடக்கம்
மே 25ல் இறுதிப் போட்டி
2025 ஐபிஎல் 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஆண்டு தோறும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 2025ம் ஆண்டு ஐபிஎல் 18வது தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம், நாளை மற்றும் நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 18வது சீசன் ஐபிஎல் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த 3 சீசன்களுக்கான தேதிகளையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 14-ந்தேதி 18-வது சீசனின் முதல் போட்டி தொடங்குகிறது. மே 25-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு சீசன், மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரையிலும், 2027-ம் ஆண்டு சீசன், மார்ச் 14-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து 10 அணிகளின் உரிமையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் போட்டிக்கான இடம், யார்-யார் எந்த தேதியில் மோதுவது உள்பட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே நாளை தொடங்கும் ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 574 பேர் இடம் பெற்றனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். இதில் 10 அணிகளும் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது. இந்த மெகா ஏலம் முடிந்த பின்பு, அடுத்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை மற்றும் வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.







