தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்
முல்தான் 2-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் கடுமையாக போராடி வருகிறது.
முல்தான், ஜன.27; பாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியும் முல்தானில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 163, பாகிஸ்தான் 154 ரன்கள் எடுத்தன.

154 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்
2-ம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (52) நல்ல துவக்கம் கொடுத்தார். அமிர் ஜங்கூ (30), டெவின் இம்லாக் (35), கெவின் சின்க்ளேர் (28) ஆகியோர் ஓரளவு ஆடினர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர், 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஷான் மசூது (2), முகமது ஹுரைரா (2) ஏமாற்றினர். இருப்பினும் பாபர் ஆசம் (31) ஆறுதல் தந்தார். ஆனால் கம்ரான் குலாம் (19) நிலைக்கவில்லை. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து, 178 ரன்கள் பின்தங்கி உள்ளது.

இன்னும் 3 நாட்கள் ஆட்டம் முழுமையாக உள்ள நிலையில் அவ்வணியிடம் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இதனால் 2-வது டெஸ்டில் பாகிஸ்தானின் வெற்றி, அவ்வணியின் அதிரடி வீரர் முகமது ரிஸ்வானை சார்ந்தே இருக்கிறது. முதல் இன்னிங்சிலும் அவர் அடித்த 49 ரன்கள்தான் பாகிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் கெவின் சின்க்ளேர் 2 விக்கெட் வீழ்த்தினார்.








