சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘கங்குவா’. இந்த திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘கங்குவா’. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ளது.‘கங்குவா’வில், இதுவரை ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது. அது சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலரில் வெளிப்பட்டது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியுள்ள சூர்யா, இந்த படத்தில் 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யா, கமலுக்குப் பிறகு தசாவதாரம் எடுத்துள்ளார் என்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பேசப்படுகிறது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி தொடர்ச்சியாக வரவேற்பைப் பெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன் ‘கங்குவா’வின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. மேலும், இது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக இருந்தது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்த வண்ணமே இருந்தது.

படத்தின் ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அது என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அதே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் உறுதியானது. இந்நிலையில், சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘மெய்யழகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக சூர்யா கூறினார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் என்றும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவருடன் போட்டி போட்டு அவர் படம் ரிலீஸ் ஆகும் அன்று, தனது படத்தைத் திரையிட விரும்பவில்லை என்றும் சூர்யா தெரிவித்தார். இதனையடுத்து கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இதை உறுதி செய்தார்.
இந்த நிலையில், படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று மாலை படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டைக் கொடுத்தது. அதில், இன்று காலை 11 மணிக்கு படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் ‘கங்குவா’ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், அந்த எக்ஸ் பதிவில், The Battle of Pride and Glory, for the World to Witness ⚔🔥
#Kanguva’s mighty reign storms screens from 14-11-24 🤎
#KanguvaFromNov14 🦅 என்று பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம், சூர்யா ரஜினியுடன் போட்டியிடுவதை தவிர்த்துள்ளார் என்றும், சிலர் ரஜினிக்காக சூர்யா விட்டுக் கொடுத்துள்ளார் என்றும் திரைத்துறையின் மூத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் இது சூர்யாவின் பெருந்தன்மை என்றும் சூர்யாவின் திரைப்படம் எப்போது வந்தாலும், அதை நாங்கள் வெற்றியடையச் செய்வோம் என்றும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ ரசிகர்களுக்கு விருந்தளிக்க, இரண்டு தரமான திரைப்படங்கள் வரவிருக்கின்றன.







