நான் முதல்வன்: முதல் மாத உதவித்தொகை வழங்கப்பட்டது

IAS, IPS, IFS, IRS போன்ற அதிகாரமிக்க ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழர்கள் அதிகளவில் இடம்பெற வேண்டும் என்ற இலக்கோடு, ‘நான்முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு UPSC தேர்வுக்குத் தயாராகும் 1,000 இளைஞர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின் அடிப்படையில் 10 மாதங்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை அளித்திடும் வகையில், முதல் மாத உதவித்தொகையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், சென்னை அண்ணா நகரில் 1000, UPSC தேர்வர்கள் படிப்பதற்கு ஏதுவான கட்டணமில்லா Study Hall வசதியையும், சென்னை மற்றும் மதுரை, கோவை மண்டலங்களில் SSC,RRB,IBPS போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான கட்டணமற்ற உறைவிடப் பயிற்சி மையங்களையும், முன்னாள் படை வீரர்களுக்கான திறன் பயிற்சிகளையும் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள நம்பிக்கை முக்கியம்; அதிலும் போட்டித் தேர்வுகளுக்கு நம்பிக்கை மட்டும் போதாது; தன்னம்பிக்கையும் வேண்டும். மாணவர்களை தமது துறைகளில் முதல்வராக்குவதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம்.
தொடங்கப்பட்ட 2 ஆண்டில் 30 லட்சம் மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டம் வருவதற்கு முன்பு 36 மாணவர்கள் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர். திட்டம் வந்த பின்பு தமிழகத்தில் இருந்து 47 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து அதிகமானோர் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆனார்கள்; ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. இதை மாற்றுவதற்கு தான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. திறமை இருந்தாலும் உரிய வழிகாட்டுதல், பொருளாதாரம் இல்லாததால் பலர் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. சென்னை அண்ணா நகரில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறும் ஆயிரம் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் ஸ்டடி ஹால் இன்று திறக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு வசதிகள் தொடர்ந்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.







