தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை… குறையுமா?

சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 7,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 56,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,000 ரூபாயைக் கடந்தது இதுவே இந்தியாவில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை இனிமேல் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 7,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 56,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் தனது உச்சபட்ச விலை ஏற்றத்தை அடைந்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து நகைக் கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, “உலகளவில் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் அனைவரும் தங்கத்தின் மீதான விருப்பத்தின் காரணமாக அனைவரும் வாங்க முன்வருவதன் காரணமாக விலை தொடர்ந்து உயருகிறது” என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர்கள், “உலக அளவில் மாறி வரும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் உள்நாட்டு கலவரங்கள், உக்ரைன், ரஷ்யா போர், காசா, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக அனைவரும் தங்கள் முதலீடுகளை தங்கத்தில் மட்டுமே செய்ய விரும்புவதன் காரணமாக இந்த விலை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை கடந்த வாரம் புதன்கிழமை 0.5 சதவிகிதம் குறைத்ததன் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விலையேற்றம் தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்றும் வரும் மாதங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.







