ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை
ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து புதிய மைல்கல்

மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 1,602 ரன்கள் குவித்து, ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல் உடன் இணைந்து சூப்பரான தொடக்கம் தந்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்திருந்த போது பிரதிகா (40) அவுட்டானார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, 102 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இந்த போட்டியில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 103 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி, 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

வதோதராவில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில், மூன்று விதமான கிரிக்கெட்டையும் சேர்த்து ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1,602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இதில் 5 சதங்களும், 10 அரை சதங்களும் அடித்துள்ளார். ஏற்கனவே 2018-ம் ஆண்டில் 1291 ரன்களும், 2022-ம் ஆண்டில் 1290 ரன்களும் குவித்து, 3 விதமான கிரிக்கெட்டையும் சேர்த்து ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனையை பாராட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மகாராணி’ போல இருக்கும் ஸ்மிருதி மந்தனா அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் எடிட் செய்துள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








