“பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும்”

வைக்கம் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா”-வில், புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிச.12) திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

பெரியாருக்கு ஸ்டாலின் புகழ்மாலை

தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடத்தப்பட்ட ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதுதான் பெரியாரின் வெற்றி, திராவிட இயக்கத்தின் வெற்றி என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

அந்த வகையில் சமூக நீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது என, முதலமைச்சர் பேசினார்.

பினராயி விஜயனுக்கு பாராட்டு

இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடிய பினராயி விஜயன், பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருந்திருப்பதாக மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.

”சாதி, ஏழை – பணக்காரன், ஆண் – பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும்” என முதலமைச்சர் பேசினார்.

இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் வி.என். வாசவன், சஜி செரியன், கோட்டயம் தொகுதி எம்.பி. பிரான்சிஸ் ஜார்ஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் வி.சாமுவேல், தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x