ஈட்டி எறிதலில் புதிய வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா
2ஆவது இடமே கிடைத்ததால் சற்று ஏமாற்றம்

தோகா.மே17; தோகாவில் நடைபெற்றுவரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு போட்டியில் மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்தினார்.
90 மீ. தூரத்தை கடந்த முதல் இந்தியர் எனும் சாதனை

இதன்மூலம் உலக அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 90 மீட்டர் தூரத்தைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் நீரஜ் சொந்தக்காரரானார்.
இருப்பினும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ராவுக்கு இரண்டாவது இடமே கிடைத்ததால் சற்று ஏமாற்றமடைந்தார்.
89.94 மீ. தூரம் எறிந்ததே முந்தைய சாதனை

ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றபோதுகூட, சோப்ரா 90 மீட்டர் தூரத்தை தாண்டி ஈட்டி எறிந்ததில்லை.
இதற்கு முன்னர் 2022-ல் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே நீரஜின் சிறந்த சாதனையாக இருந்து வந்தது.
நீரஜ்-க்கு மாயாஜால இரவாக மாறிய தோகா

90 மீட்டர் தூரம் என்பது ஒரு கனவாகவே இருந்துவந்த நிலையில், அது தற்போது நனவாகியிருப்பதால், இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ராவுக்கு நேற்றைய தினம் (தோஹா டைமண்ட் லீக் போட்டி) ஒரு மாயாஜால இரவாக மாறியது.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா நிகழ்த்தியிருக்கும் புதிய சாதனையை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.







