கேரள வங்கி மோசடி வழக்கில் 3 இடதுசாரி தலைவர்கள்
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம்,மே.28; கேரள வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் 3 மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதற்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கருவனூர் கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
வங்கி மோசடி வழக்கு; குற்றப்பத்திரிகையில் மா.கம்யூ., தலைவர்கள்

இது தொடர்பான துணை குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மூன்று பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
துணை குற்றப்பத்திரிகையில் சிபிஎம் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீன் மற்றும் மூத்த தலைவர் எம்.எம். வர்கீஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மூன்று தலைவர்களும் கட்சியின் திருச்சூர் மாவட்ட முன்னாள் செயலாளர்கள் ஆவர்.
“ஜனநாயக நெறிமுறைகளின் அனைத்து வரம்புகளும் மீறல்”

வங்கி மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மூன்று பேர் சிக்கியிருப்பது கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கருவனூர் வங்கியின் முறைகேடுகளில் சிபிஎம் கட்சியின் தலைவர்களை வேட்டையாடும் அமலாக்கத் துறையின் நடவடிக்கை ஜனநாயக நெறிமுறைகளின் அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
ஊழலை வெளிக்கொணர்ந்தவர்கள் மீதே வழக்கு: பினராயி

“கருவனூர் வங்கியில் ஊழல் செய்த அதிகாரிகளை வெளியே கொண்டு வந்து வங்கியைக் காப்பாற்ற முயன்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்களை முறைகேடு வழக்கில் அமலமாக்கத்துறை சேர்த்திருப்பதாகவும் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
“அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி என்றாலும், ஆர்எஸ்எஸ் நலன்களைப் பாதுகாக்கவும், மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைவர்களையும் அவமதிக்கவும் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிகையில்சேர்க்கப்பட்டுள்ளன” என்று சிபிஐஎம் கட்சி விமர்சித்துள்ளது.
“இதுபோன்ற பொய்யான வழக்குகளை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும்” எதிர்கொள்வோம் என்று கட்சி மேலும் கூறியுள்ளது.







