டாட்டு கடையில் வைத்து நாக்கை வெட்டிய விவகாரம்
விசாரிக்க குழு அமைத்தது மருத்துவத்துறை

டாட்டு (tattoo) கடையில் வைத்து நாக்கை இரண்டாக வெட்டி பாம்பு நாக்கு போன்று மாற்றிய விவகாரம் குறித்து விசாரிக்க மருத்துவத்துறை குழு அமைத்துள்ளது.
பாம்பு நாக்கு போல நாக்கை வெட்டினர்
திருச்சியில் ஏலியன் பாய் என்ற பெயரில், பச்சை குத்தும் கடை இயங்கி வருகிறது. இங்கு வந்த ஒரு வாடிக்கையாளருக்கு அவரது விருப்பத்தின் பேரில், நாக்கை இரண்டாக வெட்டி பாம்பு நாக்கு போன்று மாற்றப்பட்டது.

பாம்பு நாக்கு போல நாக்கை வெட்டினர்சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய இது தொடர்பான காட்சிகளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை முடிவெடுத்தது.
அதன்படி, திருச்சி மாநகர சுகாதார அதிகாரி விஜயசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
அறுவை சிகிச்சை எப்படி செய்தனர்?
அறுவை சிகிச்சை கருவி, மயக்க மருந்தை இரண்டு பேரும் எப்படி பயன்படுத்தினர் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மருத்துவ உபகரணங்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையையும் மருத்துவத்துறை தொடங்கியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 2பேர் மீது ஏற்கனவே பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைத்தல், பெண்களுக்கான பாதுகாப்பின்மை, பயிற்சி பெறாமல் மருத்துவம் பார்ப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் மேலும் வழக்குகள் பதிவு செய்ய மருத்துவ துறைதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.






