காசாவில் உதவி பெற திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
மனதை சுக்குநூறாக்கும் வகையில் வீடியோ காட்சிகள்

காசா,மே.28; போரால் உருக்குலைந்த பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அமெரிக்க ஆதரவு பெற்ற குழுவின் உதவியைப் பெற ஆயிரக்கணக்கானோர் திரண்ட காட்சி மனதை சுக்குநூறாக்கும் வகையில் உள்ளது.
காசாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடையக்கூடும் என்று பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
உதவி விநியோகத் தளத்தை முற்றுகையிட்ட மக்கள்

இதன் தொடர்ச்சியாக, காசாவில் கடந்த 11 வாரங்களாக மேற்கொண்டிருந்த முற்றுகையை இஸ்ரேலிய படைகள் சற்று தளர்த்தியுள்ளன.
இதனையடுத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற குழுவால் அமைக்கப்பட்ட அமைப்பின் உதவி விநியோகத் தளத்தை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் முற்றுகையிட்டனர்.
கூட்டம் அதிகமானதால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

தெற்கு நகரான ரஃபாவில் உள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை வளாகத்தில் இடிந்து விழுந்த வேலிகள் மற்றும் மண் சரிவுகள் மீது மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
உதவி கோருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் தங்கள் குழு பின்வாங்க நேரிட்டதாக காசா மனிதாபிமான அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாததால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உதவி வழங்கும் குழுவின் நடவடிக்கை; ஐ.நா. அதிருப்தி

இதனிடையே, உதவி வழங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்துவது ஐ.நா.சபையை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
அதேவேளையில் காசாவில் முக்கிய உதவி வழங்குநராக ஐ.நா. இருப்பதை அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
உதவியை ஆயுதமாக்குவது போல் தெரிகிறது; ஐ.நா. கருத்து

காசா மனிதாபிமான அறக்கட்டளையின் திட்டங்கள் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முரணானவை என்றும் உதவியை ஆயுதமாக்குவது போல் தெரிகிறது என்றும் ஐ.நா.சபை கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் விரக்தியடைந்த பாலஸ்தீன மக்கள் போதுமான உதவியைப் பெறுவதற்கு ஒரு விரிவான திட்டம் தயாராக இருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.







