பயணிகளுக்கு சூப்பர் செய்தி… மதுரையில் விரைவில் 24 மணி நேர சேவை

மதுரை விமான நிலையம் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் 24 மணி நேரம் செயல்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரவு நேர விமான சேவையை தொடங்க விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டு சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

 

பலமுறை வணிகர்கள் சங்கத்தினர், வர்த்தக, தொழிற்சங்கம், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவை அளிக்கும் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், வரும் அக்டோபர் இறுதிக்குள் மதுரை விமான நிலையம், 24 மணி நேரம் செயல்படும் வகையில் பணியாளர்களுக்கு 3 சுழற்சி முறையில் பணிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மதுரை விமான நிலையம் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, 24 மணி நேர விமான சேவை வழங்கப்படுவதில் (CISF) மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிவந்த நிலையில், கூடுதலாக 77 CISF வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் மதுரை விமான நிலையத்தில் தற்போது 305 மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர்.

 

மேலும், மதுரை விமான நிலைய ஊழியர்களும் சுழற்சி முறையில் பணியமடுத்தப்பட உள்ளனர். வரும் காலங்களில் 24 மணி நேரம் சேவையை தொடங்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் விமான சேவையை தொடங்க பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே சேவை வழங்கி வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தில், 24 மணிநேர சேவையைத் தொடங்கினால் பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து மலேஷியா, கோலாலம்பூர், சார்ஜா, குவைத், பஹ்ரைன், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளது தவிர்க்கப்படும் எனவும் தென் மாவட்ட மக்களுக்கு இது வரப் பிரசாதமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், விமான நிறுவனங்களின் ஒப்புதலைப் பொறுத்து விமான வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் குறித்து அட்டவணை தயார் செய்யப்படும் எனவும் மேலும் விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என மதுரை விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x