தமிழ்நாடு பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ நடைமுறை தொடரும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளித் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று, அமைச்சர் அன்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம்தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி 5ஆம் வகுப்பு மற்றும் இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு எழுத 2 மாதங்களுக்குள் வாய்ப்புத்தர வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள், அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கற்றல் திறனை மேம்படுத்த புதிய முறை

தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும்நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள 8ஆம் வகுப்புவரை அனைவரும்தேர்ச்சி என்ற நடைமுறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
“தமிழ்நாட்டில் தற்போதைய நடைமுறை தொடரும்”

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படவோ, குழப்பமடையவோ வேண்டாம்” என்று அவர் கூறினார்.
“மத்திய அரசின் முடிவு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு முட்டுக்கட்டையாகும்” என்று அமைச்சர் விமர்சித்தார்.
“பிரத்யேக கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது”

“தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், நாங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை – மேலும் பிரத்யேக மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
“மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.






