திபெத்தில் 7.1 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்
50 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேபாள நாட்டின் லெபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில், திபெத்தை மையமாக கொண்டு இன்று காலை 6.35 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. மேற்கு சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். உயிரை காப்பாற்றி கொள்வதற்கு அவர்கள் சாலைகள் உட்பட பொதுவெளியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் திபெத்-நேபாளம் எல்லையில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

குறிப்பாக திபெத்தில் உள்ள டிங்ரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாகி உள்ளதாகவும், இங்கு கடும் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார், புதுடில்லி, மேற்கு வங்கம், ஹரியானா உட்பட மாநிலங்களில் சில பகுதிகளில் உணரப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் உயிரிழப்பு பதிவானதாக தகவல் இல்லை.








