இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ‘டி-20’ போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் 4 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இதில் 3 ஆட்டங்கள் முடிவில் 2-1 என முன்னிலையில் இருந்தது இந்தியா. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது மற்றும் கடைசிப் போட்டி ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா ஜோடி ஆரம்பம் முதலே தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த போது அபிஷேக் சர்மா 36 ரன்களில் அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – திலக் வர்மா இணை ருத்ர தாண்டவமாடியது. இருவரின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரி எல்லையை நோக்கி பறந்தன. இவர்களின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் திணறினர். 17-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 51 பந்திலும், திலக் வர்மா 41 பந்திலும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் 9 சிக்சர், 6 பவுண்டரியுடன் 109 ரன்களும், திலக் வர்மா 10 சிக்சர், 9 பவுண்டரியுடன் 120 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மொத்தம் 23 சிக்சர்கள் விளாசியதால், ரசிகர்கள் சிக்சர் மழையில் நனைந்து ஆனந்தக் கூத்தாடினர்.

இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவ்வணி வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 43, மில்லர் 36 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் நடப்பு டி-20 தொடரையும் இந்திய அணி 3-1 என கைப்பற்றி சாதித்தது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று திலக் வர்மா அசத்தினார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x