ஜப்பானை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் ஜப்பானை அபாரமாக வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர், பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்று உள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த 2-வது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
3-வதாக தாய்லாந்துடன் நடந்த போட்டியில் 13-0 என கோல் மழை பொழிந்து இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. சீனாவுடன் நடந்த 4-வது போட்டியில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணியினர் அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்தனர். இந்நிலையில் நேற்று, 5-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஜப்பானுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது.

விறுவிறுப்பான ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடித்தார். 37-வது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுர் அபார கோல் போட்டார். இறுதியில் 3- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இதுவரை முடிந்துள்ள 5 லீக் போட்டிகளிலும் முழுமையாக வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 26 கோல்கள் அடித்து அசத்தி இருக்கிறது. அதேவேளையில் எதிர் அணியினரிடம் இருந்து 2 கோல் மட்டுமே வாங்கி உள்ளது. மேலும் மலேசியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறடித்த இந்திய மகளிர், தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே 2 கோல்கள் வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா. வரும் 20-ம் தேதி, ஆசிய சாம்பியன்ஸ் மகளிர் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.







