பி.வி.சிந்து, லக்சயா சென் சாம்பியன்
சர்வதேச பேட்மிண்டன் தொடர்

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோர் சாம்பியன் பட்டங்களை தட்டிச் சென்றுள்ளனர்.
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடர், உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்த்து, சீனாவின் வு லுயோ யு (Wu Luo Yu) பலப்பரீட்சை நடத்தினார்.

பரப்பான இறுதிப் போட்டியில் 21-14, 21-16 என்ற நேர்செட்களில் அபாரமாக வென்றார் பி.வி.சிந்து. இதன்மூலம் சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அவர் அசத்தியுள்ளார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென்னை எதிர்த்து, சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் தே (Jia Heng Jason Teh) மோதினார்.

விறுவிறுப்பான போட்டியில் 21-6, 21-7 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று லக்சயா சென் சாதித்துள்ளார்.

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, லக்சயா சென் ஆகியோருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.







