பிரிஸ்பேன் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

காபா மைதானத்தில் இரு அணியினர் தீவிரப் பயிற்சி

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. பெர்த் முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இதற்கு பதிலடியாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த பகலிரவு பிங்க் பால் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இதனால் நடப்பு தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்திய அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோஹ்லி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் உள்பட பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள், நிதிஷ் குமார், அஷ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரும் கடினப் பயிற்சி செய்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா, லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, புதுமுகம் பியூ வெப்ஸ்டர் உள்ளிட்டோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் அடிலெய்டில் அசத்திய ஸ்டார்க், கம்மின்ஸ், போலன்ட், லயான், அபாட் ஆகியோரும் கடினப் பயிற்சிகள் மேற்கொண்டனர்.

வழக்கம்போல் கபா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பவுன்சுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பேட்ஸ்மேன்களுக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்கும் என மைதானப் பராமரிப்பாளர் கூறியுள்ளதால் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும். இதுவரை பிரிஸ்பேனில் நடந்துள்ள 6 டெஸ்டில், கடந்த 2021-ல் நடந்த போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியால் இந்தியா கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குகிறது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடிலெய்டில் அடைந்த மோசமான தோல்விக்கு பழி தீர்க்கவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும், பிரிஸ்பேனில் வெற்றி பெறுவது அவசியம் என்பதால்  இந்திய வீரர்கள் கவனத்துடன் விளையாடுவது அவசியமாகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x