“உலக சாம்பியன் குகேஷால் தமிழகத்துக்கு பெருமை”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷால், தமிழ்நாடு பெருமை கொள்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 18 வயதில் இந்த பட்டத்தை கைப்பற்றிய இளம் வீரர் என்ற புதிய வரலாறு படைத்த குகேஷூக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 18 வயதில் இளம் செஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்ற குகேஷ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது குறிப்பிடத்தக்க இந்த சாதனை, இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம், ‘சென்னை’ உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் தக்க வைத்து உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது எனவும், உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு புகழ்மாலை சூடியுள்ளார்.

இதேபோல் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்துகளைப் பரிமாறி உள்ளார். அதில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியனாக உருவெடுத்த நமது கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். குகேஷ், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை தொடர்ந்து, தாயகத்திற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என வாழ்த்தியுள்ளார்.

அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் கவனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும், இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது எனவும் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.







