அங்கீகாரம் இல்லை: செஸ் வீராங்கனை தானியா ஆதங்கம்
டெல்லி முதலமைச்சருக்கு கடிதம் எழுதி குமுறல்

டெல்லி: விளையாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக்கூறி, செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் டெல்லி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் சதுரங்க விளையாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற பிரமிக்கத்தக்க வெற்றிகள், பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள் போன்றவற்றால், செஸ் விளையாட்டு மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. ஆனாலும், பல வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
அங்கீகாரம் கிடைக்கவில்லை என குமுறல்

அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த பிரபல சதுரங்க வீராங்கனை (Tania Sachdev) தானியா சச்தேவ், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வேதனை அடைந்துள்ளார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக செஸ் விளையாடி வருகின்றபோதிலும், டெல்லி அரசிடமிருந்து தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று, மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2022-ல் செஸ் ஒலிம்பியாட்டில் தான் படைத்த சாதனைகளை அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டியுள்ள தானியா, இவ்வருடம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்றதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
செஸ் விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ள போதிலும், தனக்கு டெல்லி அரசிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிப்பதாக எக்ஸ் பக்கத்தில் தானியா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அதிஷி, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தானியா சச்தேவ் தெரிவித்துள்ளார்.







