துபாயில் மட்டுமே விளையாடும் இந்தியா
பாகிஸ்தான் உடனான மோதலுக்கு தயார்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ அறிவித்தது.

மேலும் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் நடத்துமாறும் வலியுறுத்தியது. இதனையடுத்து நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இணைந்து நடத்த ஐசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் துபாயில் நடத்த முடிவானது.

இத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.’ஏ’ பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை பிப். 20ம் தேதி இந்தியா சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் மோதுகிறது. இம்மூன்று போட்டிகளும் துபாயில் நடக்கவ உள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் விளையாடும். மார்ச் 9ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இந்திய அணி முன்னேறினால், அந்த போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து விரைவில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியாகும் என ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.








