அல்லு அர்ஜூனிடம் போலீஸ் 4 மணி நேரம் விசாரணை
திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்

தெலங்கானா,டிச.24: திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தெலங்கானாவில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா-2’ பட சிறப்பு திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 வயது நிறைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது 8 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறப்புக்காட்சியைக் காண திரளானோர் வருவார்கள் என்பதால், அதில் பங்கேற்க அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அதனையும் மீறி அவர் கலந்து கொண்டதால் தான், பெண் உயிரிழக்க நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
4 மணி நேரம் போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, (டிச.24) இன்று காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜரானார். அவரது வருகையை ஒட்டி காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னர் அல்லு அர்ஜூனிடம் போலீசார் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன என்பது பற்றி விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. விசாரணை முடிந்த பின்னர் அல்லு அர்ஜூன் காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.







