பெட்ரோல், டீசலுக்கு GST இல்லை ஏன்?… மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து பொருட்கள், சேவைகளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களை இதுவரை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாகக் குறைந்து, மக்களுக்கு பயன் ஏற்படும் எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான கனகராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மத்திய ஜி.எஸ்.டி சட்டப்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைப்படி தான் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் வரி விதித்து, குறிப்பிடத்தக்க வருவாயை பெறுவதால், இப்பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவில்லை என வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகத்திற்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் கனகராஜ், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குவதாகவும், அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும் எனவும், எரிவாயு, பெட்ரோல், டீசல் இல்லாமல் அன்றாட வாழ்வை வாழ முடியாது எனவும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்கக் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x