டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ரோகித் சர்மா?

சிட்னி போட்டி முடிந்தவுடன் முடிவை அறிவிக்க வாய்ப்பு

மெல்போர்ன், டிச.31 ; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போன ரோகித் சர்மா, 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரின்போது இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியா வென்ற அந்தத் தொடரில் அவர் குறிப்பிடத்தக்க அளவு ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

அதிக வெற்றிகளை தேடித்தந்தவர்

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரட்டைத் தொடரிலும் சர்மா அதிக ரன்களை குவித்தார். இதன் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என மூன்று வடிவங்களுக்குமான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அனைத்து வகையான வடிவங்களிலும் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இது நடப்புத் தொடரில், ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட ஒன்று மட்டுமே அதிகமாகும்.

சிட்னி டெஸ்ட்டுடன் விடைபெறுகிறார்?

இதுபோன்ற சூழலில், சிட்னியில் நடைபெறவுள்ள 5ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய உயரதிகாரிகள் மற்றும்தேர்வாளர்களுடன் தனது முடிவு பற்றி ரோகித் சர்மா ஏற்கனவே பேசியுள்ளதாகவும், அவர் தனது மனதை மாற்றுவது சாத்தியமில்லாதது என்றும் TOI கூறுகிறது.

ஓய்வு அறிவிப்புக்கான சரியான நேரம் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதிலும், சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் அது நடக்கலாம் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

WTC Final-க்கு இந்தியா தகுதிபெற்றால்..

இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால், ரோகித் தனது முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக அந்த ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

நேற்று முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த படுதோல்விக்குப் பின்னர், “கலங்கிவிட்டதாக” ஒப்புக்கொண்டரோகித், அணியின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, தனிப்பட்ட அளவில் பேச வேண்டிய விசயங்கள் பல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“எங்கே நிற்கிறேன் என்றே தெரியவில்லை”

“ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் நான் எங்கே நிற்கிறேன்? எனது மனநிலை என்ன?” என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது எளிதானதல்ல என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

“கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி யோசிக்க எதுவும் இல்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில், சில முடிவுகள் நாங்கள் நினைத்தபடி இல்லை. ஒரு கேப்டனாக அது ஒரு ஏமாற்றம் தான்” என்று மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா தெரிவித்தார்.

 

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x