சிட்னி டெஸ்ட்டில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?
கம்பிருடன் மோதலா? அல்லது மோசமான ஆட்டம் காரணமா?

சிட்னி, ஜன.2 ; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில், பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது.
முன்னிலை பெற்ற அணிக்கு பின்னடைவு

ஆயினும், அடுத்த ஒரு மாதத்திற்குள் நிலைமை தலைகீழாக மாறும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். மழையால் டிராவான ஒரு டெஸ்ட் தவிர்த்து, எஞ்சிய இரண்டு டெஸ்ட்டுகளில் இந்திய அணி தோற்று, 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுபோன்ற சூழலில், இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சிட்னியில் நாளை தொடங்குகிறது.
கம்பிர் ரோகித் இடையே உரசல்?

இதனிடையே, கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பிருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடப்புத் தொடரில், ரோகித் சர்மா ஆறு இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால், அவர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பதாக அணி நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுபோன்ற சூழலில், சிட்னியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கௌதம் கம்பிரிடம், ஐந்தாவது டெஸ்ட்டில் விளையாடவிருக்கும் பதினொரு வீரர்கள் யார் யார் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
ரோகித் பற்றி பதிலளிக்காத கம்பிர்

அதற்கு அவர், “நாங்கள் விக்கெட்டைப் பார்த்துவிட்டு விளையாடும் அணியை நாளை அறிவிக்கப் போகிறோம்”என்று கூறினார். ரோகித் சர்மா பங்கேற்பாரா மாட்டாரா என்பது பற்றி கம்பிர் நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே, சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு தலைமை தாங்குவார் எனத் தெரிகிறது.
நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிட்னியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?

இதனிடையே,சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையெனில், ஒரு டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெயர் ரோகித் சர்மாவுக்கு வந்து சேரும்.







