முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கடந்த 470 நாள்களாக சிறையிலுள்ள தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கீழ் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வேண்டுமென்றே அமலாக்கத்துறை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுகிறது எனக்கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய போதும், ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்த்தது அமலாக்கத் துறை. இந்நிலையில், கடந்த 470 நாள்களாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், 25 லட்ச ரூபாய்கு இரண்டு பேர் பிணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டன. மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை சென்று ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.






