“சட்டவிரோத ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேறுக”
பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தல்

டெல்லி,மே.14; சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரிலிருந்து வெளியேறும்படி பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வருவதாகவும், திருடப்பட்ட பகுதியைத் திருப்பித் தருவதைத் தவிர , காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் வேறு எந்த விவாதமும் இருக்க முடியாது என குறிப்பிட்டார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இருதரப்பு ரீதியாக இருக்க வேண்டும் எனவும் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.
மோடி பேசியதை மேற்கோள்காட்டி வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் முன்னதாக கூறியதை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேற்கோள் காட்டினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் மத்தியஸ்தம் கோரியிருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு முறை முன்வந்த போதிலும், பிரச்னையை இருதரப்பு ரீதியாக மட்டுமே தீர்க்க இந்தியா உறுதியாக உள்ளது என்று ரந்திர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: வெளியுறவு அமைச்சகம்

இந்த நிலைப்பாட்டில் இந்தியா மாறவில்லை என்று கூறிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியை விட்டுக்கொடுப்பது தான் நிலுவையில் உள்ள விசயம் என்று, உறுதிபடக் கூறினார்.







