அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய திட்டம்?
நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாகத் தகவல்

வாஷிங்டன், ஜூன்.16; ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில், பல்வேறு ராணுவத் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஈரானின் உச்ச தலைவர் என்றழைக்கப்படும் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அயதுல்லாவை கொல்லும் திட்டத்தை டிரம்ப் நிராகரித்தாரா?

ஆனால், இத்திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்துள்ளதாக CBS செய்தி நிறுவனத்திடம் 3 வட்டாரங்கள் கூறியதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கிய பின்னர் நடந்ததாகக் கூறப்படும் ஒரு உரையாடலில், அயதுல்லா அலி கமேனியை கொல்வது நல்ல யோசனையல்ல என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேரடியாக உறுதிப்படுத்தாத இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது, அயதுல்லாவைக் கொல்லும் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருப்பதை நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
“ஒருபோதும் நடக்காத உரையாடல்கள் பற்றிய பல தவறான தகவல்கள் உள்ளன, அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
“அமெரிக்காவிற்கு எது நல்லது என்று அவர்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், நான் அதில் தலையிடப் போவதில்லை” என்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.







