பருவமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.147.24 லட்சம் மதிப்புள்ள, நவீன நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வருவாய்த் துறையில் பட்டா வழங்கும் பணி, சர்வே பணிகளை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த மையம் திறக்கப்பட்டது. சர்வே செய்ய பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது”.
“முன்பு, நில அளவை செய்வதற்கு சங்கிலியைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக 4,830 பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை துறையில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதேபோன்று தஞ்சையில் 180 பேர் பயிற்சி பெறக்கூடிய அளவிற்கு மையம் உருவாக்கப்பட்ட இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சர்வேயர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். பட்டா மாறுதலில் வரும் புகார்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகின்றன”.
“வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேங்கியிருந்ததோ அதை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறுசிறு பிரச்னைகள் அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன” என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.






