5 பேர் மட்டுமே பங்கேற்ற மணவிழா
அதிர்ந்த அமெரிக்க தம்பதி

அமெரிக்காவில், மணமுடிக்காமல் இணைந்து தம்பதியாக வாழ்வதும், ஒன்றிரண்டு குழந்தை பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வதும் சர்வசாதாரணம். இதெல்லாம் அமெரிக்காவில் கலாச்சாரத்திற்கு புறம்பான விசயமல்ல.
அந்த வகையில், ௐரிகான் பகுதியைச் சேர்ந்த கலினா மேரி – ஷேன் ஜோடி, கடந்த 10 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர்கள், நவ.12ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர்.
மணவிழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என 75 பேருக்கு டிஜிட்டல் முறையிலும், 25 பேருக்கு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களும் அனுப்பி அழைப்பு விடுத்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறின. மணநாளன்று, பின்னணியில் மெல்லிய காதல் கானம் ஒலிக்க மணமக்களுக்கான அலங்காரத்துடன் வந்த கலினா மேரி – ஷேன் தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபம் வெறுமையாக காட்சியளித்தது.
அழைப்பிதழ்களைப் பார்த்து பார்த்து வடிவமைத்து அனுப்பிய போதிலும் 5 பேர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர். இதனால் கலினா மேரி – ஷேன் தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த அவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தந்தது. ஆனாலும், மனதை தேற்றிக்கொண்டு வந்திருந்த சிலருடன் நடனமாடி, திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவில், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான விருந்தினர்கள் பங்கேற்ற திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.







