கஜகஸ்தானில் விமான விபத்து; 40 பேர் பலி?
25 பேர் உயிர் பிழைத்திருப்பதாக தகவல்

கஜகஸ்தான், டிச.25; கஜகஸ்தானில் 70-க்கும் மேற்பட்டோருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 40 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜே2-8243 ரக விமானம், அந்நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது.
அவ்விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான் வெளிப்பகுதியில் பறந்துபோது பனிமூட்டம் காரணமாக திசை மாறியதாகத் தெரிகிறது.
தீப்பிடித்து எரிந்த விமானம்

பின்னர் அந்த விமானம் தரையை நோக்கி அதிவேகமாக செல்லும் காட்சியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தரையிறங்க முயற்சிப்பது போல் தோன்றிய சில வினாடிகளில், அந்த விமானம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அந்த விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
40 பேர் உயிரிழந்துவிட்டதாக அச்சம்

அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விமான விபத்தில் சிக்கிய சுமார் 25 பேர் உயிர் பிழைத்துள்ளதாக கஜகஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக, கஜகஸ்தான் அவசர நிலை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







