‘விடா முயற்சி’ முதல் நாளில் ரூ.25 கோடி வசூல்..!
2 ஆண்டுக்கு பின் வந்த அஜித் படம் என்பதால் ரசிகர்கள் குதூகலம்

சென்னை, பிப்.07; அஜித் நடிப்பில் நேற்று வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று வெளியானது.
2 ஆண்டுக்கு பின் வெளியான அஜித் படம்
அஜித்தின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்தபோதும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.
இதன் காரணமாக முதல் நாள் முன்பதிவு அதிகரித்து வந்தது. அதன் பலனாக முதல் நாளில் விடாமுயற்சி படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
கமர்சியல் படமல்ல; ஆனாலும், ரூ.25 கோடி வசூல்
கமர்சியல் ஃபார்முலா இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், அதுவும் விடுமுறை அல்லாத வேலை நாட்களில் வெளியாகி முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது வியப்பை அளிப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வாரிசு திரைப்படத்துடன் வெளியானது. இதன் காரணமாக அந்த திரைப்படம் 21 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில், தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என திரைத் துறையினர் கூறுகின்றனர்.