“கொக்கி போடப் பார்க்கிறீர்கள்”?; ஓ.பன்னீர்செல்வம்
த.வெ.க உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு மழுப்பல்

சென்னை, ஜன.2 ; 2026 தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
மதுரையிலிரு்நது சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
“என்னை அதிமுகவிலிருந்து நீக்கியது விதிமீறல்”

அப்போது அவர், “என்னை அதிமுகவிலிருந்து நீக்கியது விதிமீறல்” எனக் குற்றஞ்சாட்டினார். “எனது நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்து பார்க்கவும்” என்று அவர் கூறினார். “எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் தெரியவரும்” என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அ.தி.மு.க தொண்டர்களின் உரிமையை கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர் நிர்ணயம் செய்திருக்கிறார், அதனை யாரும் பறிக்க முடியாது என்று பன்னீர்செல்வம் கூறினார்.
“கொக்கி போடப் பார்க்கிறீரகள்”

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிமேல் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் வினவினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “கடைசியாக கொக்கி போடப் பார்க்கிறீர்கள்” என மழுப்பலாக பதிலளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.







