பிரிஸ்பேனில் வரலாறு திரும்புமா?
காபா மைதானத்தில் இந்தியா தீவிரப் பயிற்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு பகலிரவு டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணியினர், பிரிஸ்பேன் 3-வது டெஸ்டில் சாதிப்பதற்கு காபா மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. பெர்த் முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இதற்கு பதிலடியாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த பகலிரவு பிங்க் பால் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இதனால் நடப்பு தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வரும் 14-ம் தேதி துவங்குகிறது.

பெர்த் டெஸ்டில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியினர், அடிலெய்டின் 2 இன்னிங்சிலும் 200 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் ஆஸ்திரேலியாவிடம் சரண்டைந்தனர். அதுவும் முதல் டெஸ்டில் பங்கேற்காத கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் விளையாடியும் கூட இந்தியாவின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. அதேபோல் இந்தியாவின் பந்துவீச்சும் முழுமையாக எடுபடவில்லை.

இந்நிலையில் அடிலெய்டு தோல்விக்கு பழி தீர்க்கவும், பிரிஸ்பேனில் சாதிக்கவும் அடிபட்ட புலி போல இந்திய அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோஹ்லி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் உள்பட பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அடிலெய்டில் தொடைப் பிடிப்பால் அவதிப்பட்ட பும்ரா, ‘ஆல்-ரவுண்டர்’ நிதிஷ் குமார் ஆகியோர் நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இருப்பினும் சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள், அஷ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் தீவிரமாக பந்து வீசினர்.

கடந்த 2021-ல் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் அடித்தது. இதனால் இந்தியாவுக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்தனர். 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 91, புஜாரா 56 ரன்கள் அடிக்க, ரிஷப் பந்த் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவிக்க, இந்தியா 329/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி அடைந்தது.

இதன்மூலம் அன்றைய தொடரை 2-1 என இந்தியா வெல்வதற்கு பிரிஸ்பேன் மைதானம் கைகொடுத்தது. தற்போது பழைய தோல்வியில் இருந்து மீண்டு வரவும், நடப்பு தொடரில் முன்னிலை பெறவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும், பிரிஸ்பேன் வெற்றி இந்தியாவுக்கு அவசியமாகிறது. எனவே அடிலெய்டு மோசமான தோல்விக்கு பழி தீர்க்க இந்திய வீரர்களும், கடந்த முறை உதவியதை போல மீண்டும் பிரிஸ்பேன் உதவுமா? என இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.







