டெல்லி தேர்தல்; மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக..!
ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என கருத்துக் கணிப்புகள்

டெல்லி, பிப்.05; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய 7 கருத்துக் கணிப்புகள்

இதனிடையே, தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட ஏழு கருத்துக்கணிப்புகள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
அவற்றில் ஆறு கருத்துக் கணிப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.
ஒரேயொரு கருத்துக் கணிப்பு மட்டும், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மையை விட இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று கூறுகிறது.
பாஜக ஆட்சியமைக்கும் என 6 கருத்துக் கணிப்புகள்

70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களிலும், பாஜக 43 இடங்களிலும் வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 தேர்தல்களில் கணிப்புகள் சரியாக இருந்தன

கருத்துக் கணிப்புகள் எப்போதுமே சரியாக இருந்ததில்லை என்றபோதிலும், டெல்லியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி சரியாக கணிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் நிரூபணமாகின.
கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள ஆம் ஆத்மி

ஆனால், தற்போதைய கருத்துக் கணிப்புகளை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்துள்ளது. “இது எங்களுக்கு நான்காவது தேர்தல், ஒவ்வொரு முறையும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என்று தேர்தல் கணிப்புகள் கூறவில்லை“ என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காக நன்கு உழைத்துள்ளார், நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார், எனவே, ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைக்கும் என்றும் அந்த தலைவர் தெரிவித்துள்ளார்.







