முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்திய புதிய பொருளாதாரக் கொள்கையின் சிற்பி

இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்த சிற்பியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத் திணறல் பிரச்னையால் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இரவு 9:51 மணியளவில் மன்மோகன் சிங் காலமானார்.
இளமைப்பருவம்

மன்மோகன் சிங் தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் கா என்ற இடத்தில் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். நாடு சுதந்திரம் பெற்றதும், மன்மோகன் குடும்பத்துடன் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். பஞ்சாப், டில்லி, ஜேஎன் பல்கலைக்கழகங்களில் மன்மோகன் பணியாற்றி உள்ளார்.
பொருளாதார ஆலோசகர்

இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தார். 1990 -91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்.
பிரதமரான ஆசிரியர்

1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். இக்காலத்தில் தான் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். பிறகு 2004 முதல் 2014 வரை பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்தார். ராஜ்யசபா எம்பியாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.








