கேப்டன் பதவியை பும்ரா ஏற்பார்
தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகினால், கேப்டன் பதவியை பும்ரா ஏற்பார் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ‘பார்டர்- -கவாஸ்கர்’ டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. பெர்த் நகரில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் அடங்கிய இந்திய அணியின் 2-வது குழுவினர், மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இவர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா செல்லவில்லை. அவருக்கு 2-வது குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதால் ரோகித் சர்மா இந்தியாவில் தங்கியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், முதல் டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்பது பற்றி உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை அவர் விலகினால், தற்போதைய துணைக் கேப்டன் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்பார் எனக் கூறினார். ரோகித் இல்லாத பட்சத்தில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். தொடக்க வீரர், 3-வது, 6-வது என பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாடும் திறன் பெற்றவர் கே.எல்.ராகுல். இவரை போன்ற திறமையான வீரரை உலகில் காண்பது அரிது எனவும் கம்பீர் பாராட்டினார்.
இந்திய அணியின் சீனியர் ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலியின் சமீபத்திய ஆட்டம் குறித்து, ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தது பற்றி பேசிய கம்பீர், இந்திய கிரிக்கெட் உடன் பாண்டிங்கிற்கு என்ன தொடர்பு இருக்கிறது? என வினா எழுப்பினார். அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் பதிலடி கொடுத்தார். என்னை பொறுத்தவரை ரோகித், கோலியின் ‘பார்ம்’ பற்றி கவலைப்படவில்லை. இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்துள்ளனர். தொடர்ந்து சாதிக்கவும் காத்திருக்கின்றனர் எனவும் உறுதி அளித்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பணி கடினமானது என்பது எனக்கு தெரியும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது ஏமாற்றம். இதற்கான விமர்சனங்களை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்.







