2வது ODIல் இந்திய மகளிர் அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை வென்றது

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், ஹர்லீன் தியோலின் அதிரடி சதத்தால் 115 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணத்தில் 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி பங்கேற்கிறது. ஏற்கனவே டி-20 தொடரை 2-1 என இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றினர். முதல் ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது இந்தியா. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்று இந்தியா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா(53), பிரதிகா(76) சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (22) அடித்தார். அதிரடியாக விளையாடிய ஹர்லீன் தியோல் சர்வதேச போட்டியில் தமது முதல் சதத்தை விளாசினார். ஹர்லீன் 103 பந்தில் 115 ரன்களுக்கு (16 பவுண்டரி) அவுட்டானார். பின்னர் ஜெமிமா அரைசதம் அடிக்க (52), 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. ரிச்சா (13), தீப்தி (4) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து வந்தது. இருப்பினும் கேப்டன் ஹேலே மேத்யூஸ் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 5வது விக்கெட்டுக்கு ஷிமெய்ன் இணைந்து 112 ரன்கள் சேர்த்து தோல்வியை தவிர்க்க போராடினார். இறுதியில் 106 ரன்களில் ஹேலே மேத்யூஸ் பெவிலியன் திரும்பினார். ஷிமெய்ன் (38) அவுட்டானார்.

இறுதியில் 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆல் அவுட்டானது. இதனால் 115 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றதுடன், நடப்புத் தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்தது. இந்தியா சார்பில் பிரியா 3, பிரதிகா, திதாஸ், தீப்தி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

நேற்று 358/5 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்கள் சாதனையை சமன் செய்தது. முன்னதாக 2017ல் அயர்லாந்துக்கு எதிராக 358/2 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.







