ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்
WHO தலைவர் நூலிழையில் உயிர் தப்பினார்

ஏமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாஸ் நூலிழையில் உயிர் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காசாவை உருகுலைத்த இஸ்ரேல், தற்போது ஹமாஸ் ஆதரவு நாடுகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம் ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு இப்போது பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். நேற்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது திடீரென நடத்திய தாக்குதலால், பயணிகள் உள்ளிட்டோர் 4 பக்கமும் உயிருக்கு பயந்து சிதறி ஓடினர்.

இந்த கொடூர தாக்குதலில் சனா விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கிறது. மேலும் 3 துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், மின் விநியோகம் முடங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே சனா விமான நிலையம் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, சர்வதேச விமானத்தில் ஏற இருந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். தற்போது தாம் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது பணிகள் முடியும் வரை தாக்குதல் தொடரும் எனவும், ஈரானுக்கு பக்க பலமாக ஏமனில் போராடும் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஏமனில் தாக்குதல் நடத்துவதற்கு போர் விமானங்கள் கிளம்பி சென்ற காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.








