டிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ் வாழ்த்து
அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஒப்புதல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப்-க்கு வாழ்த்து தெரிவித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபருக்கான தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளைப் பெற்று, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதன்முறையாக ஹோவர்டு பல்கலைக்கழகத்தில், தமது ஆதரவாளர்கள் முன்பு தோன்றி கமலா ஹாரிஸ் பேசினார். அப்போது டொனால்ட் டிரம்பிடம் அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் செய்யும் என தெரிவித்தார். மேலும் 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தபோது, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்து, டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனக் கூறினார். நாம் இருட்டுக்குள் நுழைகிறோம் என்பது போன்று பலர் உணருகின்றனர் என்பது தெரியும் எனவும், ஆனால், இருட்டாக இருக்கும்போதே, நாம் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும் என்ற பழமொழியையும் கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார்.
முன்னதாக, டொனால்ட் டிரம்பை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட அதிபர் ஜோ பைடன், அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மேலும் வெள்ளை மாளிகைக்கு வரும்படியும் டிரம்புக்கு அழைப்பு விடுத்தார்.







