மெல்போர்ன் டெஸ்ட்; நிதிஷ் குமார் அசத்தல் சதம்

ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது இந்திய அணி

மெல்போர்ன், டிச.28; மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நிதிஷ் குமார் ரெட்டியின் அபார சதத்தால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது.

போட்டியின் 2ஆவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பன்ட் 6 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சரிவிலிருந்து மீட்ட நிதிஷ், சுந்தர்

மூன்றாவது நாளான இன்று, ரிஷப் பன்ட் 28 ரன்களுக்கும், ஜடேஜா 17 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டியும் வாஷிங்டன் சுந்தரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.

7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்த தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை அவர்கள் இருவரும் மீட்டெடுத்தனர். அடிக்க வேண்டிய பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டி ரன்களை சேகரித்த நிதிஷ் குமார் , ஸ்காட் போலந்தின் பந்தில் பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்

நிதிஷின் தந்தை ஆனந்தக் கண்ணீர்

இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 8ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.

நிதிஷ் குமார் சதத்தை எட்டியபோது, மெல்போர்ன் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்துநின்று அவருக்கு கைதட்டி வாழ்த்தினர். போட்டியைக் காண வந்திருந்த நிதிஷ் குமாரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

21 வயது நிரம்பிய ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமாரின் சதத்தின் மூலம் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. அவருக்கு ஈடுகொடுத்த விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். இவர்களது ஆட்டத்தால் இந்திய  அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது.

இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவைவிட 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் எஞ்சியிருப்பதால், இப்போட்டியில் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x