FIR எழுதப்பட்ட விதம் மிக மோசமாக உள்ளது
அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; நீதிபதிகள் அதிருப்தி

சென்னை, டிச.28 ; அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை, தங்களது செல்போன் மூலமாக எடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று (டிச.28) விசாரணைக்கு வந்தது.
போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல்

அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்தது.
அப்போது நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரி கூட உதவி செய்ய முடியாதா? எனக் கேள்வி எழுப்பினர்.
அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் , சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். யாரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கவே காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்ததாக ராமன் தெரிவித்தார்.
ஒருவர் மட்டுமே குற்றவாளியா..?

“இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் குற்றவாளி என தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்“, ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் ராமன் விளக்கமளித்தார்.
குற்றவாளி வேறு செல்போன் வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ராமன் கூறினார்.
FIR எடுத்தவர்கள் 14 பேர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை, 14 பேர் தங்கள் செல்போன் மூலமாக எடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டோம் என்றும், அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆணும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர். .
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் படிப்பு முடியும்வரை அவரிடம், எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு

மாணவி விவகாரத்தை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
“பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை”, ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக் கூடாது? விருப்பப்படி ஏன் உடை அணியக் கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.






