ஆற்றில் கொட்டிய கழிவுகளை அகற்ற உத்தரவு

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆற்றின் குறுக்கே கட்டடக் கழிவுகள் கொட்டுவதால் நீரோட்டத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் என நீர்வள ஆதரத்துறை வழக்கறிஞர் சண்முகநாதன் வாதிட்டார்.
ஈரடுக்கு மேம்பால கட்டுமானத் திட்டமே ஆற்றின் மேல் பாலம் அமைத்துச் செல்வது தான். அதனால் தூண்கள் அமைக்க ஆற்றின் குறுக்கே கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு தூண்கள் அமைத்து வருவதாகவும் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட தீர்ப்பாயம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆற்றில் கொட்டிய கட்டடக் கழிவுகளை அகற்றிட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், கொடுக்கப்பட்ட நிபந்தனையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பின்பற்றவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்காமல் தீர்ப்பாயத்தில் நீர்வள ஆதரத்துறை முறையிடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
வரும் அக்டோபர் முதல் தேதி நீர்வள ஆதாரத் துறை, கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை முறையாக அகற்றியதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.







