“மாற்று அரசியலில் இருந்து விலகியதால் தோல்வி”
கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் விமர்சனம்

டெல்லி, பிப்.09; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோற்றதற்கு மோசமான பரப்புரை மற்றும் ‘மாற்று அரசியல்’ எனும் பாதையிலிருந்து விலகியது ஆகியவையே காரணம் என்று, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
மாற்று அரசியலை எதிர்பார்த்தவர்களுக்கு ஆம் ஆத்மியின் தோல்வி பெரும் பின்னடைவாகும் என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
“தேர்தல் தோல்விக்கு கெஜ்ரிவால் தான் காரணம்”

இந்த தோல்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் காரணம் என்று அவர்கள் இருவரும் விமர்சித்துள்ளனர். “இந்த தோல்வி முடிவின் ஆரம்பம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்று அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும், ஜனநாயகமும் நிறைந்ததாக கருதப்பட்ட கட்சி, ஒரு மேலாதிக்கம் கொண்ட ஊழல் நிறைந்த கட்சியாக கெஜ்ரிவாலால் மாற்றப்பட்டது என்று பிரசாந்த் பூஷண் சாடினார்.
“உள்கட்சி மோதல்களால் பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் நீக்கம்”

பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் வெடித்த உள்கட்சி மோதல்கள் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
கட்சி வழிநடத்தப்படும் விதம் மற்றும் கெஜ்ரிவாலின் செயல்படும் பாணி ஆகியவற்றால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுமே அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது.







